visitors

Monday, August 18, 2014

நண்பர் ஜோஷ்

எங்கள் வீட்டு நாய் நேற்று (16.08.2014) இறந்துவிட்டது. எனக்கு அருகில் இருந்த நண்பர்களில், எனக்கு அதிகம் பிடித்த நண்பர்களில் இந்த ஜோஷ் ம் ஒருவன். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் என்னுடன் இருந்தவன். என்னை அதிகம் நான்றாக புரிந்துகொண்டவன்.

பத்து வருடங்களுக்கு முன்புவரை எனக்கு அதிகம் பிடித்தது தினமும் காலையில் அவனுடன் வாக்கிங் போவதுவும் ஓன்று.

 எங்கள் ஊரில் ஓர் பெரிய ஏரி இருக்கிறது. எங்கள் ஊரின் பெயர் பெரியேரிபட்டி, காரணம் அந்த ஏரிதான். கிட்டத்தட்ட 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது எங்கள் ஏரி. சுற்று வட்டாரத்தில் பெரிய ஏரியும் அதுதான். அந்தகாலத்தில் ஏழு ஏரிகள் தண்ணீர் நிரம்பி உடைந்துகொண்டதாம். அவ்வளவு தண்ணீரும் எட்டாவது ஏரியாக இருக்கும் எங்கள் ஏரிக்கு வந்து எங்கள் ஏரி தாங்கி நின்றதாம். அவ்வளவு பெருமை எங்கள் ஏரிக்கு உண்டு. ஆனால் நான் பிறந்தபிறகு அந்த ஏரி நிரம்பியதே இல்லை.

சுமார் 45 வருடங்களுக்கு முன்புஒருமுறை நிரம்பி இருக்கிறது அந்த சமயம் எங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி அனைவரும் ஆடு, மாடு, கோழிகள், பண்டம், பாத்திரம் அனைத்தையும் தூக்கிக்கொண்டு, அருகில் இருக்கும் வேறொருவர் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். எங்கள் வீடு, காடு எல்லாம் தண்ணீர் நிரம்பி இருந்ததாம். என் அப்பா அடிக்கடி சொல்வார். எனக்கு தெரிந்து 1990 வாக்கில் ஒருமுறை பாதி அளவு தண்ணீர் நின்றது. எங்கள் வீட்டு அருகில் இருக்கும் கிணறு, குட்டைகள் அனைத்தும் வயல்களுடன் சேர்ந்து ஒரே நீராக சமமாக நிரம்பி இருந்தது.

எங்கள் வீட்டு வாசலை ஒட்டியபடியே ஒரு வாய்க்கால் இருக்கிறது. அதுவும் எங்கள் வீட்டு முன்பு மட்டும்தான் இன்னும் வாய்க்கால் இருக்கிறது. வேறு இடங்களில் எல்லாம் அழித்து காட்டோடு சேர்த்து விட்டார்கள். அந்த வாய்க்காலில் மீன் குஞ்சுகள் வரும். அதனை பட்டை வைத்து பிடிப்பார்கள். பட்டை என்றால் வாய்க்காலில் இருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் வாய்க்கால் நீளத்திற்கு ஒரு பாயை சின்னதாக வெட்டி ஒட்டியிருப்பார்கள். அது சல்லடைபோல இருக்கும், தண்ணீர் அந்த பாய் வழியாக கீழே போய்விடும். அதில் வரும் மீன் குஞ்சுகள் அதைத்தாண்டி ஒரு வாழை பட்டையில் போய் விழும், அந்த பட்டையில் இருந்து துள்ளி துள்ளி அதன் முனையில் இருக்கும் ஒரு சட்டியில் போய் விழும். இரவு பட்டை போட்டால், காலையில் சென்று எடுத்து வந்து குழம்பு வைப்பார்கள். என் வீட்டின் முன்பும் நிறைய பட்டை போடுவார்கள். இது எல்லாமே 1990 களில் அதற்க்கு பிறகு அவ்வளவு மழையோ, ஏரிக்கு தண்ணீரோ வந்தது கிடையாது. அந்த சமயம் என் சித்தப்பா, என் வீட்டுக்கு முன்பு காட்டருகில் இருக்கும் ஓடையில் வலைபோட்டு மீன் பிடிப்பார். அப்பொழுது மீனோடு சேர்ந்து நிறைய தண்ணீர் பாம்புகளையும் பிடிப்பார். நாங்கள் கரையில் நின்றுகொண்டு பயத்துடன் வேடிக்கை பார்ப்போம்.

ஏரியின்  கரைமட்டுமே இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு இருக்கும். காலையில் அவனுடன்  (ஜோஷ்) வாக்கிங் போவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அவனுடன் வாக்கிங் போகும்போது எனக்கே பெருமையாக இருக்கும். அவ்வளவு கம்பீரமாக இருப்பான். அவனுடன் செல்லும்போது எதிரில் எங்களை பார்பவர்கல்கூட மரியாதையுடன் பார்ப்பார்கள். அவன் உருவம் அப்படி. அவன் 1996 ல் எனது பெரிய அண்ணன் பெங்களூர் ல் கல் உடைத்துகொண்டிருந்தார், அங்கே இருந்து அவனை எடுத்து வந்தார். பெரிய ஜாதி நாய் என்று சொல்வார்கள். குட்டியிலேயே அவ்வளவு கம்ப்பீரமாக இருக்கும். நான் அப்பொழுது 11 ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன், என்னுடனே காட்டிற்கு வரும், காட்டில் நானும் அவனும் ஒளிந்துகொண்டு விளையாடுவோம். நான் ஒரு செடியின் கீழ் படுத்துகொண்டால் அவன் என்னை கண்டுபிடிக்க துள்ளி குதித்து ஓடிவருவானே அந்த அழகே தனிதான். அவ்வளவு அழகு, கம்பீரம், என்னை கண்டுபிடிக்க துடிக்கும் பார்வை, என்னை கண்டபின் அவன் முகத்தில் தெரியும் வெற்றி களிப்பு, அப்பா அப்பப்பா
டேய் i miss you da Josh.

எங்கல் வீட்டில் எங்கள் எல்லோரையும்விட அதிகம் சாப்பிடுபவன் அவன்தான். அவனுக்கு மட்டும் சோறு போட்டு மாளாது அவ்வளவு சாப்பிடுவான். என்னுடன் இரவு நேரங்களில் காட்டுக்கு வருவான். அந்த ஏரியில் காட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமானால் இரவு 10 மணிக்கு மேல்தான் முடியும், பகல் வேளையில் ஏரியை ஒட்டியமாதிரி இருக்கும் காட்டுகாரர்களே நீர் பாச்சிகொண்டிருப்பார்கள். எங்கள் காடு கொஞ்சம் தூரம் என்பதால், இரவு 10 மணிக்குமேல் சென்று வேறு காட்டில் பாய்ந்துகொண்டிருக்கும் தண்ணீரில் சிறிதுமட்டும் திருப்பிவிட்டுவருவோம். அதுவும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் வந்து திருப்பிகொல்வார்கள். அந்த சமயங்களில் என் வீட்டிலிருந்து நான்தான் செல்வேன், அப்பொழுதெல்லாம் அவன் எனக்கு முன்பாக போய்கொண்டிருப்பான். அவனை போல் ஒரு நண்பன் சான்சே இல்ல. அதுவும் என் வாலிப வயதில் என்னுடன் இருந்த நண்பன்.

ஒரு சீக்கை  அடிப்பேன், ஜெயம் படத்தில் ரவி அடிப்பானே அதுபோல, ஆனால் அந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்ளவில்லை, அந்தபடமேல்லாம் அதற்க்கு பின்பு வந்தது, ஒரு அடையாலத்துக்குதான். அந்த சீக்கை கேட்டவுடன் எங்கிருந்தாலும் சரி அடுத்த நொடியில் என் முன் நிர்ப்பான்.

 பிறகு நான் திருச்சிக்கு MA படிக்க சென்றுவிட்டேன், ஒருமுறை வீட்டிற்கு வந்தபொழுது அவன் இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடாமல் உடம்பு சரியில்லாமல் இருப்பதாக என் அப்பா சொன்னார். எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் எங்கள் வீட்டிற்கு எதோ மண்வெட்டியோ, கயிறோ எடுக்கவந்தபோது அவரை கடிப்பதுபோல ரொம்ப மூர்க்கமாக குறைத்ததால், அவர் செய்வினை செய்துவிட்டார் என்றார் என் அப்பா. நான் உடனே கறி கடைக்கு சென்று 100 ரூபாய்க்கு வெறும் எலும்பு மட்டும் வாங்கிவந்து போட்டோம், அன்று மாலையே குணமானது.

ஒருமுறை என் வீட்டருகே நிறைய நாய்கள் ஒன்றுசேர்ந்து சண்டையிட்டுகொண்டன, என் பெரியப்பா வீட்டு நாய் ஓன்று இருந்தது கிட்டத்தட்ட இரண்டிக்கும் ஒரே வயதுதான். அதனை மற்ற நாய்கள் அனைத்தும் சேர்ந்து கடித்துகொண்டிருந்தன, நானும் அவனும் அப்பொழுதுதான் வயக்காட்டில் இருந்து வந்தோம், உடனே இவன் ஓடிபோய் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு நாயை அதன் கழுத்தை கவ்வி வாயாலே அதனை தூக்கி ஒரு சுத்து சுத்தி வீசினானே பார்க்கணும், அனைத்து நாய்களும் ஓடிவிட்டன. நான் பார்க்கும் எல்லோரிடமும் அதனை பெருமையாக சொல்லிகொண்டிருப்பேன்.

எனக்கு மட்டுமல்ல, என் வீட்டின் அருகில் இருக்கும் எல்லோருக்கும் அவன் பெஸ்ட் friend. எல்லோரும் அவனை அன்புடன் பழகுவார்கள். அவர்கள் வீட்டில் ஒருவன்போல். முத்து அத்தை எப்போ பார்த்தாலும் டேய் கருப்பா வாடா என்பார்கள். சரவணன், லச்சுமி அக்கா, முருகேசன் அண்ணா அனைவரும் அவனுக்கு friends. என் அம்மா அவனை டேய் சின்னவனே வாடா என்றுதான் அழைப்பார், டேய் பையா வாடா என்றுதான் என் அம்மா அழைப்பார். என் அப்பா அட கழுத வாடா இங்கன்னா என்பார்.

ஒருமுறை விவசாய காட்டுக்கு வைக்கும் எலி மருந்தை தின்றுவிட்டான். அன்று நான் கல்லூரிக்கு வேலைக்கு கிளம்பிகொண்டுருக்கிறேன். ஒரு சிறுவன் ஓடி வந்து உங்கள் நாய் சாக கிடக்கிறது எதையோ விஷத்த தின்னுடிச்சி என்று சொன்னான். உடனே நானும் சரவணனும், அப்பொழுது அவன் மட்டும்தான் வண்டி வைத்திருப்பவன், இருவரும் அவனை தூக்கிக்கொண்டு அமரகுந்தி மாட்டாஸ்பத்திரிக்கு கொண்டுபோய், அங்கே doctor விஷ முறிவு மருந்து இங்கே இல்லை, சீட்டு எழுதி தர்றேன் ஓமலூரிலோ அல்லது சேலதிலோ பொய் வாங்கிவந்தால் போட்டு பார்க்கலாம், இல்லையேல் கொண்டுபோய் புதைத்துவிடுங்கள் என்றார். உடனே நானும் சரவணனும் தாரமங்கலம், ஓமலூர், சேலம் என்று சுற்றி மதியம் 2 மணிவாக்கில் சேலத்தில் வாங்கிவந்து கொடுத்தோம். doctor போட்டுவிட்டு தூக்கி செல்லுங்கள் நிச்சயமில்லை என்றார், அதன்பிறகு வீட்டிற்கு வந்து தேறிவிட்டான். இது நடந்து 6 , 7 வருடம் இருக்கும்.

அன்று அவன் இறந்தது என்னை அதிகம் பாதித்தது. நானே அவனை எடுத்துசென்று, குழிவெட்டி அவனை மறைத்துவிட்டு வந்தேன். நெறைய இழவு வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அங்கே குழி வேட்டுவோரை பார்த்தால் எவ்வளவு உன்னதமான பணியை செய்கிறார்கள், நாமும் இதுபோல ஒரு புண்ணிய செயலை பிற்காலத்தில் செய்யவேண்டும் என்று நினைத்ததுண்டு. அந்த புண்ணிய பணியை என் நண்பனுக்கு செய்ததில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. நண்பா thank you  நண்பா.

No comments:

Post a Comment