visitors

Wednesday, July 23, 2014

குழந்தை கதைகள்

 சமிபத்தில் நான் படித்த சிறுகதை, இதில் முக்கியம் என்னவென்றால் இதுபோன்ற கதைகளை நாம் சிறுபிள்ளையாக இருந்தப்போது நம் தாத்தா பாட்டி சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் தற்போதைய நவீன உலகில் நாம் இதுபோன்ற கதைகளை நம் குழந்தைகளுக்கு சொல்வதே  இல்லை. நான் சிறு வயதில் என் பாட்டியிடம் இதுபோன்ற கதைகள்  ஏராளமாக கேட்டிருக்கிறேன், குருமதாங்காய் (இது ஒரு சிறிய காய், அந்தகாலத்தில் காடுகளில் சிறு கொடிபோல் படர்ந்திருக்கும், அதில் சின்ன சின்ன காய்கள் இருக்கும். பார்பதற்கு தர்பூசணி போன்ற வடிவத்தில் இருக்கும் ஆனால் மிக சிறியதாக கோலிகுண்டை விட சற்று பெரியதாக இருக்கும். பழமாக இருந்தால் சாப்பிடலாம், பச்சையாக இருந்தால் கசக்கும்.) குருமத்தான்காய் கதைகள் கேட்டிருக்கிறேன். அது எர் ஓட்டும் உழவனை கல்யாணம் செய்துகொண்டு அவனுக்கு களைப்பாக இருக்கும்போது குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பது, ஏர் மாடுகளை மேய்ப்பது போன்ற உதவிகளை உழவனுக்கு செய்யுமாம். வெள்ளரிக்காய்க்கு ஆசைப்பட்டு தன்னை பிளேடால் காயபடுதிகொண்ட குள்ளநரி. ஏழு கடல் ஏழு மலை தாண்டி சென்று தன் குழந்தையை கண்டுபிடிதுவரும் காகம் இப்படி நிறைய கதைகள் நாம் கேட்டிருக்கிறோம், ஆனால் நம் குழந்தைகளுக்கு சொல்வதில். இப்போது குழந்தைகளுக்கு , அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் மட்டுமே சொல்கிறோம். இதுபோன்ற கதைகளை சொல்வதில்லை. இப்பொழுது பிறந்த குழந்தையில் இருந்து சாவை எதிநோக்கியுள்ள பெரியவர் வரை சம்பாதிக்க வேண்டியுள்ளது. 85 வயது பெரியவர்கூட office வெலைக்கு போகவேண்டியுள்ளது. இந்த அவசர உலகில் நாம் நம் குழந்தைகளுக்கு கதை சொல்வதை மறந்துவிட்டோம்.
அதுபோன்ற ஒரு கதைதான் இது, படித்து, முடிந்தால் இதுபோன்ற கதையை நினைவுகூர்ந்து நம் குழந்தைகளுக்கு சொல்ல முயற்சிப்போம். நன்றி.

காணாமல் போன வானம்

  • சித்திரக் கதை
    சித்திரக் கதை
  • சித்திரக் கதை
    சித்திரக் கதை
முன்னொரு காலத்தில் வானமும் பூமியும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகத்தான் இருந்தன. இந்த இரண்டும் ஒட்டி இருந்ததால் பூமி எது, வானம் எது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்போது மெல்லிய காற்று வீசியது. இரண்டுக்கும் இடையே ஊசி அளவு இடைவெளி ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட துக்கத்தில் வானத்தின் உடல் நீலமாகவும், பூமியின் முகம் கறுப்பாகவும் மாறிவிட்டது.
அந்தக் குட்டியூண்டு இடை வெளியில் மழை பெய்யத் தொடங்கியது. காற்றும் வீசியது. உடனே இடைவெளியில் ஒரு புல் வளர ஆரம்பித்தது. புல் வளர முடியாமல் வானம் இடித்துக்கொண்டிருந்ததால் அதுக்கு மூச்சு முட்டியது.
உடனே அது வானத்திடம் வேண்டிக் கேட்டுக்கொண்டது. “ வானமே! வானமே என்னால வளர முடியல. கொஞ்சம் மேலே போயேன். நீ மேலே போனா நான் வளர்ந்திடுவேன்” என்று சொல்லியது.
வானமும் ‘சரி, சரி’ என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டு தன்னைக் கொஞ்சம் மேலே உயர்த்திக்கொண்டது.
அடுத்ததாகப் புல்லின் நிழலில் தோன்றிய ஒரு செடி, வானத்திடம் மன்றாடியது. “வானமே! வானமே! என்னாலும் கிளய பரப்பி வளர முடியில. எனக்காகக் கொஞ்சம் மேலே போறியா” என்று அன்புடன் கேட்டுக்கொண்டது.
வானத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இருந்தாலும் செடியின் தலைக்கு மேல் ஓர் அடி உயர்ந்து, “செடியே போதுமா” என்றது.
செடியும் “உம் உம்” என்று தலையாட்டியது. பிறகு செடி வளர, வளர, வானமும் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் செடி மரமாகி நின்றது. அதற்கு மேல் நின்றது வானம்.
‘அப்பாடா’ன்னு பெருமூச்சுவிட்டது வானம். ஆனால் அதனை யாரோ தொடுவது போல இருந்தது.
வானம் உற்றுப் பார்த்தது. அங்கு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. “வானமே! என்னால தும்பிக்கைய தூக்க முடியலேயே. நீ முட்டிக் கிட்டு நிற்கிறியே” என்றது யானை.
“உனக்கும் பிரச்சினையா?” என்று சொல்லியபடி கொஞ்சம் மேலே உயர்ந்தது வானம்.
அதுவும் நீடிக்கவில்லை. “என் கழுத்தைப் பாரு. எவ்ளோ நீளம். கழுத்தைத் தொங்கப் போட்டுக்கிட்டு என்னால நடக்க முடியல. நான் தலையை நிமிர்ந்து நடக்க நீ உதவி செய்” என்று அழுதது ஒட்டகச்சிவிங்கி.
பொறுமையாக இருந்த வானம், ஒட்டகச்சிவிங்கி தலைக்கு மேலாகக் கொஞ்சம் உயர்ந்தது.
திடீரென்று யாரோ தன் உடலைக் கிழிப்பது போல உணர்ந்தது வானம். ஆமாம். மலையின் உச்சிதான் வானத்தைக் கிழித்தது. “வானமே! வானமே! என்ன மன்னிச்சிடு. நான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்திட்டே இருக்கேன்” என்றது.
‘‘சரி’’ன்னு சொன்ன வானம், இரண்டு மலைகளின் உயரத்திற்கு மேல் நின்றது.
அந்த நேரம் பார்த்து மரத்தின் பொந்திலிருந்து வெளியேறிய பறவை வானத்தின் மீது மோதியது. “மன்னிச்சிக்கோ வானமே! மன்னிச்சிக்கோ..”ன்னு என்று மன்னிப்பு கேட்டது. “பறவையே… எம்மேல நீ ஏன் மோதுற?” என்று கேட்டது வானம்.
“என்னோட இறக்கைங்க பறக்க விரும்புது. உன்ன கடந்து போக விரும்புது. ஆனால், உன்னைத் தாண்டி போக முடியலையே” என்று சொன்னது பறவை.
“அதற்கென்ன”ன்னு சொன்ன வானம், கிடுகிடுவென மேலே போய்விட்டது.
இதைக் கீழே இருந்து பார்த்துக்கொண்டேயிருந்த பாம்பு, எறும்பு, தவளைகள் எல்லாம் சந்தோஷத்தில் குதித்தன. அப்பதானே சூரியனையும் நிலாவையும் பார்க்க முடியும் என்று அவை பேசிக்கொண்டன. இதுகூட பரவாயில்லை. இரவில் மட்டுமே கண் தெரிகின்ற ஆந்தை சந்தோஷத்தில் அலறியது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டது வானம்.
ஆனால், திரும்பவும் ஒரு சில குரல்கள் ஒலித்தன. “நாங்க மேல போகணும்..மேலே போகணும்”. யார் என்று வானம் பார்த்தது.
ஆம், மேகங்கள்தான். “நாங்க மேல போனாதான் மழையாப் பொழிவோம்.. பொழிஞ்சாதான் பூமி நனையும். தண்ணீர் தோன்றும்” என்று கூட்டாகக் கூறின. அதன் பின்னே சென்ற வானம், மேகங்கள் கரையும் இடத்திற்கு மேல் ஓர் அடியில் போய் நின்றது. ஆனாலும் அது நிலைத்தபாடில்லை.
திடீரென்று, “நான்கிட்டே இருந்தா பூமி பொசுங்கிடும்” என்று உண்மையைச் சொன்னது சூரியன். “நானும் கிட்டே இருந்தா பகலே வராது” என்றது நிலவு. விஷயத்தைப் புரிந்துகொண்ட வானம் உயர உயர போனது.
“இப்படியே யாருக்கும் தொந்தரவு தராம மேலயே போய்ட்டா என்ன?”ன்னு வானத்துக்கு ஒருநாள் யோசனை வந்தது. உடனே வானம் ஒரு நாள் காணாமலும் போய்விட்டது.
அது காணாமல்போன திசையைப் பார்த்துத்தான், பூமியில் பிறந்த மனிதர்கள் எல்லாரும் வானம், வானம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிறிய குழந்தைகளுக்கு அம்மாக்கள், இல்லாத வானத்தைக் காட்டி வானம், வானம் என்கிறார்கள். குழந்தைகளும் ‘ஆமாம்’ போடுகின்றன.

நன்றி- தி ஹிந்து தமிழ் நாளிதழ்.

2 comments:

  1. குருமதாங்காய் பற்றிய தகவல் சிறு வயதை நினைவூட்டியது. இந்த காயை வைத்து பலமுறை விளையாடி இருந்தாலும் உண்மையான பெயர் இது நாள் வரைக்கும் தெரியாமலே இருந்தது.

    நீங்கள் குறிப்பிடுவது Cucurbitaceae குடும்பத்தை சேர்ந்த Apodanthera pringlei என்ற கொடி வகை தாவரம் என்றே நினைக்கிறேன்.






    http://sozhagakkondal.blogspot.fi/

    ReplyDelete